மதுபானங்களை ஏற்றி வந்த மினி லாரி சிறைபிடிப்பு

மதுபானங்களை ஏற்றி வந்த மினி லாரி சிறைபிடிப்பு

Update: 2021-12-17 19:52 GMT
ஓமலூர், டிச.18-
ஓமலூர் அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மதுபானங்களை ஏற்றி வந்த மினி லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் மதுக்கடை
ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி அம்மாசி கவுண்டர் காட்டுவளவு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருடைய தோட்டத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 
இந்த நிலையில் நேற்று புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைக்கு தேவையான மதுபானங்களை ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்தது. இதையறிந்து ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மதுபானங்களை ஏற்றி வந்த மினி லாரியை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, செல்வம் மற்றும் போலீசார் லாரியை சிறைபிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், பண்ணப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ,மாணவிகள் பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இந்த வழியாக தான் சென்று வருகின்றனர். மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியாக உள்ள இங்கு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டால், பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே டாஸ்மாக் மதுக்கடை இங்கு அமைக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார், அதிகாரிகளுடன் பேசி மதுபானங்களை ஏற்றி வந்த லாரியை திருப்பி அனுப்பினர். இதன் பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்