தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி;

Update: 2021-12-17 18:29 GMT

கழிவுநீர் தேங்கும் மாட்டு சந்தை

  வேலூரை அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வெளியேறாமல் சாக்கடையாக மாறி தேங்கி நிற்கிறது. கால்வாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -மோகனசுந்தரம், பொய்கை..

புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பார்களா?

  திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே காங்கிரானந்தல் ஏரிக்கு செல்லும் வழியில் புதிதாக ரூ.60 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. தற்போது கிராம சேவை மையக் கட்டிடத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகிறார்கள். நோயாளிகள் நலன் கருதி புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பார்களா?
  -ராகவன், கண்ணமங்கலம்.

 கால்வாய் அடைப்பு

  வேலூரை அடுத்த பொய்கை மாட்டு சந்தை அருகே கலைஞர் நகர் உள்ளது. இங்கு சாலையை கடக்கும் கழிவு நீர் கால்வாய் சிறு பிளாஸ்டிக் பைப்பினால் அமைக்க பட்டு உள்ளது. இதனால் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு அருகே உள்ள கூட்டுறவு சங்க கட்டிடம் வரை தண்ணீர் தேங்குகிறது. கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -மோகன்ராஜ், வேலூர்.

பழுதான சிறு மின்விசை தொட்டிகள்

  திருவண்ணாமலை மாவட்டம் ராட்டினமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இ.பி.நகர் பகுதியில் 2 இடங்களில் சிறு மின்விசை தொட்டிகள் உள்ளன. அந்தத் தொட்டிகள் பழுதான நிலையில் உள்ளன. இதனால் அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். பழுதானத் தொட்டிகளை சரி செய்து கொடுத்தால் வரும் கோடைக்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
  -ராகவேந்திரா, ராட்டினமங்கலம்.

 கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

  வாலாஜாபேட்டை நகராட்சி தொப்பைசெட்டி தெருவில் பல சிறு வணிக கடைகள் உள்ளன. கடைகளின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. வியாபாரிகளுக்கு இடையூறாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் அடைப்பை நீக்கி தூர்வார வேண்டும் என்பது வியாபாரிகளின் எதிர்பார்ப்பு.
  -என்.அசோக்குமார், வாலாஜாபேட்டை.
  வேலூர் மாநகாட்சி 4-வது மண்டலம் அனைத்து வார்டுகளிலும் கடந்தசில மாதங்களாக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. அனைத்து வார்டுகளிலும் முறையாக கண்காணிக்காததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அனைத்துக் கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  -ஆர்.காதர், வேலூர்.

 ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு

  திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பூனைத்தாங்கல் ஊராட்சி சேனியநல்லூர் கிராமத்தில் ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து பலர் வீடுகள், கோவில்களை கட்டி உள்ளனர். இதனால் 30 ஏக்கர் விளைநிலத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வருவார்களா?
  -பிரபாகரன், பூனைத்தாங்கல்.

 சாலை வசதி தேவை

  ராணிப்பேட்டை மாவட்டம் தாஜ்புரா ராஜீவ்நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள மக்களுக்கு போதிய சாலை வசதி இல்லை. அலுவலகத்துக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  -லதா, தாஜ்புரா.

 குரங்குகள் தொல்லை

  திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் திருக்கோவிலூர் ரொடு சின்னக்கடை தெரு பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அந்தக் குரங்குகள் வீடுகளின் மீது ஏறி ஓடுகளை பிரித்து எறிந்து அட்டகாசம் செய்து வருகின்றன. விரட்டியடிக்க முயன்றால் குரங்குகள் கடிக்க பாய்கின்றன. வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும்.
  -புகழேந்தி, வேட்டவலம்.

 தண்ணீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கல்குப்பம்மதுரா அரிமாநகர் கிராமத்தில் 82 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகத்துக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது. அந்த வேலையை சரியாக பூர்த்தி செய்யவில்லை. தொட்டியின் உள்ளே சிமெண்டு பூச வில்லை. ஆனால் வேலை முடிந்தது போல் பலகை வைத்துள்ளனர். பணியை விரைந்து முடித்து தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
  -ராமதாஸ், அரிமாநகர்.

 தினத்தந்திக்கு நன்றி

  வாலாஜா ஒன்றியம் செட்டிதாங்கல் ஊராட்சி வ.உ.சி.நகர் பகுதியில் உள்ள பொதுக்குழாயில் கடந்த ஒருவாரமாக தண்ணீர் வரவில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது சீரான குடிநீர் கிடைக்கிறது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.
  -ஆர்.செல்வராஜ், செட்டிதாங்கல்.

சாலையை சீர் செய்ய வேண்டும்

  ராணிப்பேட்டை மாவட்டம் 12-வது வார்டு ஏரி 6-வது தெருவில் உள்ள சிமெண்டு சாலை மிக மோசமாக உடைந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகிறார்கள். அந்தச் சிமெண்டு சாலையை சீர் செய்ய வேண்டும்.
  -கல்யாணி, ராணிப்பேட்டை.

பருப்பு, பாமாயில் வினியோகம் செய்யப்படுமா?

  திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ரேஷன்கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் சிரமப்படுகிறார்கள். மாவட்ட வழங்கல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து ரேஷன்கடைகளில் பருப்பு, பாமாயில் வினியோகம் செய்யப்படுமா?
  -சதாசிவம், திருப்பத்தூர்.

 பள்ளியை சூழ்ந்த மழைநீர்

  ஆரணியை அடுத்த நெசல் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை சூழ்ந்து ஒருமாதமாக மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் நடடிவக்கை எடுத்து பள்ளியை சூழ்ந்த மழைநீரை அகற்ற வேண்டும்.
  -ராகவேந்திரா, நெசல்.

முறையாக இயக்கப்படாத அரசு பஸ்கள்

  வேலூரில் இருந்து அரக்கோணம் வரை பாணாவரம், போளிப்பாக்கம், அன்வர்த்திபேட்டை வழியாக தடம் எண்:487 என்ற அரசு பஸ் தினமும் இயக்கப்பட்டு வந்தது. அதில் சோளிங்கர் பணிமனையில் இருந்து ஒரு பஸ்சும், ஆற்காடு பணிமனையில் இருந்து ஒரு பஸ்சும் என 2 பஸ்கள் இயங்கின. கொரோனா பரவலுக்கு பிறகு 2 பஸ்களும் முறையாக இயக்கப்படவில்லை. சோளிங்கர் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ் மதிய வேளையில் இயக்கப்படவில்லை. ஆற்காடு பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் காலை வேளையில் மட்டும் இயக்கப்படுகிறது. மதியம் இயக்கப்படவில்லை. அதில் ஆற்காடு பணிமனை பஸ் வேலூர் வரை இயக்கப்படாமல் ஆற்காடு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ்களை பழையபடி இயக்க அரசு போக்குவரத்துக்கழக பணிமனை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -சுரேஷ், போளிப்பாக்கம்.

மேலும் செய்திகள்