வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2021-12-17 17:26 GMT
வேலூர்

வேலூர் ஓட்டேரியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி இயங்கி வருகிறது. இங்கு வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 120 பேர் தங்கி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக காப்பாளராக பணியாற்றி வந்தவர் சண்முகம். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மதுமிதா விடுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது விடுதியின் காப்பாளர் வெளியே சென்றிருந்ததால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள பாலிடெக்னிக் விடுதியின் காப்பாளர் கருணாநிதியை தற்காலிகமாக காப்பாளராக நியமித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்குள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் அவர்கள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்கும் படி கூறினர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்தனர். 

அதில், மாணவர்கள் நலனுக்காக எங்களது காப்பாளர் உறுதுணையாக இருந்தார். அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மீண்டும் அவரை எங்களது விடுதிக்கு காப்பாளராக பணியில் அமர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தின் போது அலுவலகத்தில் இருந்த மாணவர்களுக்கு அலுவலக ஊழியர்கள் டீ கொடுத்து உபசரித்தனர். இது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்