திருப்பூரில் நல்லாற்றின் கரையோரம் உள்ள வீடுகளை 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ்
திருப்பூரில் நல்லாற்றின் கரையோரம் உள்ள வீடுகளை 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ்
திருப்பூர்,
திருப்பூரில் நல்லாற்றின் கரையோரம் உள்ள வீடுகளை 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
பொதுப்பணித்துறை நோட்டீஸ்
திருப்பூர் அங்கேரிப்பாளையம், ஆத்துப்பாளையம் பகுதியில் நல்லாற்றின் கரையோரம் குடியிருப்பவர்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அங்கேரிப்பாளையம், ஆத்துப்பாளையம், திருவள்ளுவர் நகர், அண்ணா நகர் பகுதிகளில் நல்லாற்றின் கரையோரம் ஓடை புறம்போக்கில் 15 ஆண்டுகளுக்கு மேலாக 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகிறார்கள். இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டுவரி உள்ளிட்ட அனைத்தும் இருந்தும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் மூலமாக குடியிருப்போருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் 15 நாட்களில் காலி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் வகுப்பினர்
அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேறு இடத்தை தேர்வு செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். அங்கேரிப்பாளையம் கிழக்கு வீதியில் சாலை புறம்போக்கில் பல ஆண்டு காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இதுபோல் அங்கேரிப்பாளையத்தில் நல்லாற்றின் கரையோரம் குடியிருக்கும் பட்டத்தரசியம்மன் வீதியை சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பினர் 30 பேர் வீட்டையும் காலி செய்ய பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரி அவர்களும் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.