பி.ஏ.பி. வாய்க்கால் பாலங்களை உயர்த்திக் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பி.ஏ.பி. வாய்க்கால் பாலங்களை உயர்த்திக் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
குண்டடம்:
குண்டடம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் பாலங்களை உயர்த்திக் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தண்ணீர் திருட்டு
குண்டடத்தை அடுத்துள்ள நந்தவனம்பாளையம், எரகாம்பட்டி, சிங்காரிபாளையம் பகுதிகளில் பாயும் பிஎபி கிளை வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. சமீப வருடங்களாக தண்ணீர் பாயும் காலங்களில் தண்ணீர் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு வகைகளில் தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதில் மதகுகளில் தென்னை மட்டைகளை வைத்து வாய்க்காலில் உடைப்பை ஏற்படுத்தி தண்ணீர் திருடுவது, ரோடுகளைக் கடந்து செல்லும் இடங்களில் உள்ள பாலங்களில் தென்னை மட்டைகள், சருகுகளைப் போட்டு அடைப்பை ஏற்படுத்தி அதனால் தண்ணீர் பொங்கி வாய்க்கால் உடைந்து செல்வது போன்று தண்ணீர் திருட்டில் ஈடுபடுவது என பல விதங்களில் தண்ணீர் திருடப்பட்டு வருகிறது.
இதனால் ஆயக்கட்டில் உள்ள கடைமடைகளுக்கு தண்ணீர் செல்வது பாதிக்கப்பட்டு கடைமடை விவசாயிகள் பெறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நந்தவனம்பாளையம் கிளை வாய்க்காலில் மட்டும் பிரதான வாய்க்காலில் இருந்து கடைமடை வரை 7-க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன.
பாலங்களை உயர்த்தி கட்ட கோரிக்கை
இந்த பாலங்கள் குழாய்களை வைத்து கட்டப்பட்டுள்ளதால், தண்ணீர் திருட்டில் ஈடுபடும் விஷமிகள் குழாய்களை தென்னை மட்டைகள் மற்றும் சருகுகளைக் கொண்டு வந்து போட்டு அடைப்பை ஏற்படுத்தி விடுகின்றனர். இதனால் தண்ணீர் பொங்கி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே மேற்கண்ட வாய்க்காலில் கடைமடை வரையுள்ள அனைத்து பாலங்களையும் கான்கிரீட் பாலங்களாக உயர்த்தி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.