கொடைக்கானல் அருகே காட்டெருமைகள் முட்டி குதிரை பலி

கொடைக்கானல் அருகே காட்டெருமைகள் முட்டி குதிரை பலியானது.;

Update: 2021-12-17 16:54 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே சின்ன‌ப்ப‌ள்ள‌ம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான 3 குதிரைக‌ள், அப்பகுதியில் உள்ள அவ‌ர‌து தோட்டத்தில் நேற்று காலை மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு முகாமிட்டிருந்த‌ காட்டெருமைகள் கூட்டமாக திடீரென தோட்டத்துக்குள் புகுந்து, 2 குதிரைகளை முட்டின. இதில் நிலைகுலைந்த குதிரை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. மற்றொரு குதிரை பலத்த காயம் அடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பலியான குதிரையின் உடலை பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர். மேலும் காயம் அடைந்த குதிரைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், குதிரை பலியானதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சின்னப்பள்ளம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்