தேங்கி நிற்கும் தண்ணீரால் 2 ஆயிரம் வாழைகள் நாசம்

திண்டுக்கல் அருகே ஒருமாதமாக வடியாமல் தேங்கி நிற்கும் தண்ணீரால் 2 ஆயிரம் வாழைகள் நாசமாயின.

Update: 2021-12-17 16:35 GMT
திண்டுக்கல்:
சமீபத்தில் கொட்டித்தீர்த்த வடகிழக்கு பருவமழையால், திண்டுக்கல் அருகே எஸ்.பெருமாள்கோவில்பட்டியில் உள்ள பெரியகுளம் கடந்த மாதம் நிரம்பியது. இதனால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து குளத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வயல்களை சூழ்ந்தது. அதில் சங்கர் என்ற விவசாயி வாழை பயிரிட்டுள்ள வயலிலும் தண்ணீர் புகுந்தது. முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீர் இதுவரை வடியவில்லை. வாழை பயிரிட்ட வயல் சதுப்பு நிலமாக மாறி விட்டது.
பொதுவாக வாழை பயிருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவது தான் வழக்கம். இதனால் வாழை பயிரிட்ட வயலில் மண் காய்ந்த நிலையில் தான் இருக்கும். ஆனால் ஒரு மாதமாக வயலில் தண்ணீர் தேங்கியதால் வாழை மரங்களின் இலைகள் பழுக்க தொடங்கி விட்டன. அதோடு வேர்கள் அழுகியதால் ஒவ்வொரு வாழை மரமாக வேரோடு சாய்ந்து விழுந்தபடி உள்ளது. வாழைகள் காய்க்கும் பருவத்தில் நாசமாவதால் விவசாயிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயி சங்கர் கூறுகையில், பெரியகுளத்தில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒரு மாதமாக வயலில் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. வாழைகள் நாசமாகி வருகின்றன. இதனால் நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். இதையடுத்து அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து புகைப்படம் எடுத்தனர். ஆனால் பருவமழையால் பாதிப்பு இல்லை என்று அறிக்கை அனுப்பி விட்டோம். இதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டனர். எனவே கடனை திருப்பி கொடுக்க வழி தெரியாமல் நிற்கிறேன். தண்ணீரால் நாசமாக வாழைக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்