திருப்பூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2021-12-17 16:27 GMT
திருப்பூர், 
திருப்பூரில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர், புறநகர் மேற்கு, புறநகர் கிழக்கு மாவட்டங்கள் சார்பில் திருப்பூரில் குமரன் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. கடுமையான நூல் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, அம்மா மினி கிளீனிக் மூடல், பெட்ரோல், டீசல் விலை மீதான மாநில அரசு வரியை குறைக்காதது, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகிய பின்னரும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டவே முதல்கட்டமாக இந்த போராட்டம் நடக்கிறது. விடியும் ஆட்சி என்று கூறினார்கள். இதைப்பார்த்தால் வீடியோ ஆட்சி போல் உள்ளது. முதியோர் உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்படும். மகளிருக்கு உரிமைத்தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். கல்விக்கடன் ரத்து, நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்த எதையும் நிறைவேற்றவில்லை. இனியும் மக்களை ஏமாற்றாமல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இறுதிவேண்டுகோள் வைக்கிறோம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்வழக்கு போட்டு வருகிறார்கள். இதை கண்டு அஞ்சமாட்டோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே திருப்பூர் மக்களுக்கு திண்டாட்டம் தான். கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் சாயப்பட்டறைகள் அனைத்தும் மூடப்பட்டு பின்னலாடை தொழில் நலிவடைந்தது. அதன்பிறகு 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3-வது நாளில் சாயப்பட்டறையினருக்கு ரூ.212 கோடி வட்டியில்லா கடனுதவி செய்யப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உதவப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அடிக்கடி மின்வெட்டு, நூல் விலை கடும் உயர்வு போன்றவற்றால் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்