ரூ.3 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு
ரூ3 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 நாட்களையும் சேர்த்து ரூ.3 ஆயிரம் கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏ.டி.எம். சேவைகள் முடங்கியது.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் 2 வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்றுமுன்தினம் வேலைநிறுத்தம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் 9 சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தனர்.
ஏ.டி.எம்.சேவை பாதிப்பு
மாவட்டத்தில் 352 பொதுத்துறை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. அந்த வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் என மொத்தம் 3 ஆயிரம் பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றார்கள். வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளில் காசோலை பரிமாற்றம், டெபாசிட், பணப்பரிவர்த்தனை, அன்னிய செலாவணி மாற்றம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நாளொன்றுக்கு ரூ.1,500 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. 2 நாட்களையும் சேர்த்து ரூ.3 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
செயல் அதிகாரிகள் மட்டுமே வங்கியில் இருந்தனர். மற்றவர்கள் இல்லாததால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இருப்பு இல்லை. அதுபோல் பணத்தையும் ஏ.டி.எம். எந்திரங்களில் டெபாசிட் செய்ய முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
ஆர்ப்பாட்டம்
முன்னதாக நேற்றுகாலை திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டுக்குழு மாவட்ட பொறுப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார். வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் நிர்வாகிகள் விஜய் ஆனந்த், ராதாகிருஷ்ணன், கற்பகம், மகாதேவன், ரங்கசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.