கோத்தகிரியில் சாண உரம் விற்பனை அதிகரிப்பு
கோத்தகிரியில் சாண உரம் விற்பனை அதிகரிப்பு
கோத்தகிரி
கோத்தகிரியில் இயற்கை உரத்தை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் சாண உரம் விற்பனை அதிகரித்து உள்ளது.
இயற்கை விவசாயம்
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைகாய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள்.
கோத்தகிரியில் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மழை மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் இந்த மாதங்களில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விவசாயம் செய்வது இல்லை.
சாண உரம் விற்பனை
இந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே விவசாயிகள் பயிர்களை சாகுபடி செய்ய விளைநிலங்களை தயார் செய்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் மண்ணை உழுது பதப்படுத்தி இயற்கை உரங்களை மண்ணுடன் கலந்து இயற்கை விவசாயம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
ரசாயன உரங்களால் பாதிப்பு அதிகம் என்பதால் விவசாயிகள் இயற்கை உரத்துக்கு மாறி உள்ளனர். எனவே கோத்தகிரி பகுதியில் இயற்கை உரமான சாண உரத்தின் விற்பனை அதிகரித்து உள்ளது. இது குறித்து கோத்தகிரியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
உபரி வருவாய்
ரசாயன உரங்களை பயன்படுத்தினால் மண் வளம் கெட்டுவிடும். அத்துடன் அதன் விலை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால் விவசாயிகள் சாண உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக விளைச்சலும் அதிகமாக கிடைக்கிறது. ஒரு லாரி சாண உரம் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. சாண உரம் விற்பனை அதிகரித்து உள்ளதால் மாடுகளை வைத்து இருக்கும் விவசாயிகளுக்கு உபரி வருவாயும் கிடைத்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.