திருவள்ளூரில் நஷ்டஈடு வழங்காததை கண்டித்து அரசு பஸ் சிறைபிடிப்பு
திருவள்ளூரில் நஷ்டஈடு வழங்காததை கண்டித்து அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் சிறைபிடித்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சாவு
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரை சேர்ந்தவர் குட்டியப்பன் (வயது 50). இவர் கடந்த 23.12.2016 அன்று திருவள்ளூர் ஆயில் மில் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பஸ் ஒன்று இவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குட்டியப்பன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அவரது மனைவி லட்சுமி சூர்யா கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இழப்பீடு
இந்த வழக்கு விசாரணை மோட்டார் வாகன விபத்து சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த 4.12.2019 அன்று இந்த வழக்கில் உயிர் இழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.16 லட்சத்து 82 ஆயிரம் வழங்க வேண்டுமென்றும் என்றும் உரிய காலத்தில் தொகையை வழங்கவில்லை என்றால் 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார்.
இதை தொடர்ந்து போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் இழப்பீடு தொகையை வழங்காததால் பாதிக்கப்பட்டவரின் வக்கீல் மேல்முறையீடு செய்தார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்பத்தில் 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
சிறைபிடிப்பு
ஆனாலும் போக்குவரத்து துறையினர் அலட்சியம் காட்டியதால் நேற்று லட்சுமி பிரியா அவரது வக்கீல் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் சென்னையிலிருந்து திருப்பதி நோக்கிச் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து கோர்ட்டு வளாகத்தில் கொண்டு சென்று நிறுத்தினர்.
அப்போது அந்த பஸ்சில் இருந்த திரளான பயணிகளை வழியிலேயே இறக்கிவிட நேர்ந்ததால் பயணிகள் அவதியுற்றனர்.