சென்னை விமான நிலையத்தில் ரூ.68 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.68 லட்சத்து 9 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-12-17 09:59 GMT
துபாய் விமானம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக பெங்களூரு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது பற்றி சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.

இதையடுத்து சென்னையில் இருந்து துபாய் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது 30 வயது வாலிபர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர்.

ரூ.68 லட்சம் வெளிநாட்டு பணம்

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அவரது சூட்கேசில் காகிதங்களுக்குள் கட்டுகட்டாக அமெரிக்க டாலர், சவுதி ரியால் இருந்தன.

அவரிடம் இருந்து மொத்தம் ரூ.68 லட்சத்து 9 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியால் மற்றும் அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த வாலிபரின் துபாய் பயணத்தை ரத்து செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இந்த பணம் யாருடையது? அது ஹவாலா பணமா? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்