ஆட்டோ கவிழ்ந்து பால் வியாபாரி பலி

கடையநல்லூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-12-16 21:46 GMT
கடையநல்லூர்:
கடையநல்லூர் இக்பால் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகூர் மீரான் (வயது 47). பால் வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நாகூர் மீரான் நேற்று காலையில் கடையநல்லூர் அருகே கண்மணியாபுரத்தில் உள்ள பால் பண்ணையில் இருந்து பால் வாங்கி கொண்டு விற்பனைக்காக ஆட்டோவில் எடுத்து சென்றார். அந்த ஆட்டோவை கடையநல்லூர் ஆமினா அம்மாள் தெருவைச் சேர்ந்த முகம்மது கான் ஓட்டினார். கண்மணியாபுரம் அருகே சாலையோர வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவின் இடிபாடுகளுக்குள் சிக்கிய நாகூர் மீரான் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் முகம்மது கான் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த முகம்மது கானை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த நாகூர் மீரானின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்