உயர்கல்வி, சுகாதாரத்தில் தமிழகம் முன்னேறிய மாநிலம்-கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

“தமிழகம் உயர்கல்வி மற்றும் சுகாதாரத்தில் முன்னேறிய மாநிலம்” என மதுரையில் நடந்த கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

Update: 2021-12-16 21:45 GMT
மதுரை
“தமிழகம் உயர்கல்வி மற்றும் சுகாதாரத்தில் முன்னேறிய மாநிலம்” என மதுரையில் நடந்த கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
பட்டமளிப்பு விழா
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மு.வ. அரங்கில் நடந்தது. அன்னை ெதரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் வரவேற்றுப் பேசினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்தி பேசினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
உயர்கல்வியை பொறுத்தமட்டில், தேசிய அளவில் தமிழகம் மிகவும் முன்னேறி உள்ளதை அறிய முடிகிறது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, கல்வி நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரத்துறையில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் உள்ளது. படித்து பட்டம் பெறும் பெண்கள் தொழில் முனைவோராகவும் உருவாக வேண்டும். பொருளாதார ரீதியாக பெண்கள் வலிமையானவர்களாக இருக்க வேண்டும். அறிவு, பொருளாதாரத்துக்கான காலமாக இது உள்ளது. பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும் திட்டங்களை உருவாக்க வேண்டும். திறமையான, படித்த பெண் தொழில் முனைவோர்களால் வீடு மட்டுமின்றி நாடும் முன்னேற்றம் அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் பொன்முடி
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
அன்னை தெரசா பல்கலைக்கழகம், தமிழகத்தில் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம். படித்தவுடன் வேலை தேடுவது இயல்பாக இருந்தாலும், பட்டம் பெற்ற மாணவிகளுக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும். சமூக சமத்துவத்துக்காக பெரியார், அம்பேத்கர் ஆகியோர் பாடுபட்டனர். இதன் விளைவாக நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியில்(ஜி.இ.ஆர்.) 27.2 சதவீதத்தில், தமிழகம் 51.4 சதவீதம் பங்களிப்பு செய்துள்ளது. ஆரம்ப கல்விக்கு காமராஜர் வித்திட்டது போல, உயர்கல்விக்கு கருணாநிதி வித்திட்டார். அவரது வழிவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 21 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க உத்தரவிட்டுள்ளார். இந்த கல்வியாண்டில்  அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு 25 சதவீத இடங்கள் அதிகமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் பேசும் போது, “கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச அளவில் 3 பெண் விஞ்ஞானிகளுக்கு அன்னை தெரசா பெண் விஞ்ஞானி விருதை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. பயோடெக்னாலஜி துறை கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தந்துள்ளது. தற்போது உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது” என்றார்.
18 ஆயிரம் மாணவிகள்
கடந்த 2019-20, 2020-21 கல்வி ஆண்டுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 549 மாணவிகள் நேரடியாக பட்டம் பெற்றனர். 17,451 மாணவிகள் தபால்மூலம் பட்டம் பெற்றனர். 
இவர்களில் 145 பேர் முனைவர் பட்டமும், 845 பேர் எம்.பில். பட்டமும், 3042 பேர் முதுகலை பட்டமும், 11,210 பேர் இளநிலை பட்டமும் பெற்றுள்ளனர். 2,378 பேர் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் பெற்றனர். எம்.பில். படிப்பில் 3 மாணவிகள் வெள்ளிப்பதக்கமும், முதுகலையில் 3 பேர் தங்கப்பதக்கம், 17 பேர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர். இளங்கலை பட்டப்படிப்பில் 4 பேர் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. விழாவில் திருப்பதி, பத்மாவதி மகிளா விஸ்வவித்யாலயாவின் துணைவேந்தர் ஜமுனா துவ்வுரு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

மேலும் செய்திகள்