ராமநாதபுரத்தை சேர்ந்தவர் விரைவில் இலங்கையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றம்

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் விரைவில் இலங்கையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றம்;

Update: 2021-12-16 21:44 GMT
மதுரை
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மெஹருன்நிஷா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
எனது கணவர் ரிபாயுதீனை போதைப்பொருள் கடத்தியதாக, கடந்த 2013-ம் ஆண்டு இலங்கை போலீசார் அவரை கைது செய்து, அங்கே உள்ள சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து கடந்த 2016-ம் ஆண்டு இலங்கை கோர்ட்டு தீர்ப்பளித்தது. கடந்த 2010-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் இரு நாட்டிலும் உள்ள அந்தந்த நாட்டு கைதிகளை சொந்த நாட்டுக்கு கொண்டு வந்து சிறையில் அடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் எனது கணவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுதாரர் கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, பதிலுக்காக காத்திக்கிறோம் என மத்திய அரசு தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் கணவர் அடுத்த மாதம் (ஜனவரி) இலங்கை சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றப்படுவார் என தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தற்போதைய நிலை அறிக்கையை அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்