பத்ரா ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை; தந்தை இறந்த துக்கத்தில் விபரீத முடிவு

என்.ஆர்.புரா அருகே தந்தை இறந்த துக்கத்தில் பத்ரா ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2021-12-16 21:25 GMT
சிக்கமகளூரு: என்.ஆர்.புரா அருகே தந்தை இறந்த துக்கத்தில் பத்ரா ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

கல்லூரி மாணவி

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா சவுதிகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியின் மகள் ஸ்பந்தனா(வயது 18). இவர், என்.ஆர்.புராவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். 

இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மஞ்சுநாத் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். மஞ்சுநாத் இறந்ததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். தந்தை இறந்த துக்கத்தில் ஸ்பந்தனா பெரும் துயரத்திற்கு ஆளானார். 

4 மாதங்களுக்கு மேல் ஆகியும் தந்தை இறந்த துக்கத்தில் இருந்து ஸ்பந்தனா மீளவில்லை. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஸ்பந்தனா கல்லூரிக்கு வழக்கம்போல் சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் ஸ்பந்தனா வீடு திரும்பவில்லை. இதனால் தாய் மஞ்சுளா, ஸ்பந்தனாவை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். 

ஆனால் அவர், செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து மஞ்சுளா, மகளின் நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நண்பர்கள், ஸ்பந்தனா கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மஞ்சுளா, மகள் ஸ்பந்தனாவை அக்கம்பக்கம் தேடிபார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 

ஆற்றில் குதித்து தற்கொலை

இதற்கிடையே மெனசூர் அருகே ஓடும் பத்ரா ஆற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து மஞ்சுளா அங்கு சென்று பார்த்தார். அப்போது ஆற்றில் பிணமாக கிடப்பது ஸ்பந்தனா என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா, மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த என்.ஆர்.புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 

பின்னர், ஆற்றில் மிதந்த ஸ்பந்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், தந்தை இறந்த துக்கத்தில் ஸ்பந்தனா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்