விஷவண்டு தாக்கியதில் பெண் பலி

விஷவண்டு தாக்கியதில் பெண் பலி

Update: 2021-12-16 21:07 GMT
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே மேலசங்கரன்குழி பகுதியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 43), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (39). 
இவருடைய வீட்டின் அருகில் ஆட்டு கொட்டகை உள்ளது. இங்கு கடந்த 14-ந் தேதி அன்று காலையில் வள்ளியம்மாள் சென்றுள்ளார். அப்போது அங்கு கூடு கட்டியிருந்த விஷ வண்டு அவரை தாக்கியது. ஆனால் வள்ளியம்மாள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை. மாலையில் வீடு திரும்பிய கணவர் சுயம்புலிங்கத்திடம், வள்ளியம்மாள் விஷ வண்டு தாக்கியதை தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பினார்.
மறுநாள் இரவு வள்ளியம்மாளுக்கு திடீரென தலைசுற்றுடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே சுயம்புலிங்கம் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு வள்ளியம்மாளை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சுயம்புலிங்கம் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியம்மாள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்