சசிகலாவுக்கு எதிரான வழக்கில் 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளுக்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கில் 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படைக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளுக்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கில் 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படைக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விசாரணை நடத்தவில்லை
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவடைந்ததை அடுத்து அவர்களில் சசிகலா, இளவரசி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.அடுத்த சில மாதங்களில் சுதாகரனும் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருந்ததை சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா அம்பலப்படுத்தினார். சொகுசு வசதிகளை பெற சசிகலா ரூ.2 கோடியை லஞ்சமாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கி இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவும் உறுதி செய்தது. இதையடுத்து கர்நாடக ஊழல் தடுப்பு படையினர் சசிகலா மீது கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கில் போலீசார் தீவிரமான முறையில் விசாரணையை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
பொதுநல மனு
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் சசிகலா மீதான இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்படி ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டது. இந்த மனு மீது தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐகோர்ட்டின் உத்தரவின்படி கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஊழல் தடுப்பு படை போலீசார், மூடிய கவரில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். அதன் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2 மாதம் காலஅவகாசம் கேட்டனர். இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கினர். ஒருவேளை அதற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாவிட்டால், போலீஸ் துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2 வாரம் காலஅவகாசம்
அதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் துறை செயலாளர் சார்பில் அவரது வக்கீல் நேரில் ஆஜராகி, போலீஸ் துறை செயலாளரின் நெருங்கிய உறவினர் இறந்துவிட்டதால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த பொதுநல மனு கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் துறை செயலாளர் சார்பில் வக்கீல், குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு போலீஸ் துறை மந்திரியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2 வாரங்கள் காலஅவகாசம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
நேரில் ஆஜராக வேண்டும்
இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது. ஒருவேளை 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், போலீஸ் துறை செயலாளர் (உள்துறை செயலாளர்) நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கே.அரவிந்த் ஆஜரானார்.