கோபி, சென்னிமலை, சிவகிரி பகுதியில் உள்ள கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு

கோபி, சென்னிமலை, சிவகிரி பகுதியில் உள்ள கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2021-12-16 20:25 GMT
ஈரோடு
கோபி, சென்னிமலை, சிவகிரி பகுதியில் உள்ள கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோபி
தனுர் மாதம் என அழைக்கப்படும் மார்கழி மாதம் நேற்று பிறந்தது. இதையொட்டி கோபி அக்ரகாரம் கிருஷ்ணன் வீதியில் உள்ள கருப்பராயன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது கருப்பராயருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
அக்ரகாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது விசாலாட்சி, விஸ்வேஸ்வரர் ஆகியோர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
கொண்டத்து காளியம்மன் கோவில்
மார்கழி மாத பிறப்பையொட்டி கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் நடை நேற்று அதிகாலை 4 மணிஅளவில் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 
இதேபோல் கோபி சாரதா மாரியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், அய்யப்பன் கோவில், சுப்பிரமணியசாமி கோவில், பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், கோபி மாதேசியப்பன் வீதியில் உள்ள மாதேஸ்வரர் கோவில், கோபி வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவில் உள்பட கோபி பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது. 
இதையொட்டி கோபி அக்ரகாரம் பகுதியை சேர்ந்த பஜனை பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக வந்தனர்.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் முருகப்பெருமானுக்கு மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கட்டுப்பாடுகளுடன் கோவில் நிர்வாகம் மார்கழி மாத சிறப்பு வழிபாட்டை நடத்த முடிவு செய்தது. அதன்படி நேற்று மார்கழி மாத சிறப்பு வழிபாடு அதிகாலை 5.30 மணிக்கு கோமாதா பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் மார்கழி மாத விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், அன்னதானம் ஆகியவை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
சிவகிரி
மார்கழி மாத முதல் நாளையொட்டி சிவகிரி வேலாயுதசாமி கோவில் நடை நேற்று அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்பட்டது.  பின்னர் சாமிக்கு பால், இளநீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடப்பட்டன. இதையடுத்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது ஏராளமான முருக பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். 
இதேபோல் சிவகிரி அருகே வேட்டுவபாளையத்தில் உள்ள புத்தூர் அம்மன் கோவில், அம்மன் கோவில் பகுதியில் உள்ள பொன்காளி அம்மன் கோவில், நாகேஸ்வர்கோவில், கலியுகவரதராஜன் பெருமாள் கோவில், சிவகிரி எல்லை மாகாளி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது.

மேலும் செய்திகள்