தனியார் மயமாக்கலை கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் மயமாக்கலை கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-12-16 19:12 GMT
புதுக்கோட்டை
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்காக குளிர்கால கூட்டத்தொடரில் வங்கி சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்ப பெற கோரியும் 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம்
 இதேபோல, புதுக்கோட்டை மாவட்ட வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.என்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் நிர்வாகி பாண்டியன் முன்னிலை வகித்தார். ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி வெங்கடேசன், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்கள் திரளான கலந்து கொண்டனர். 
வர்த்தகம் பாதிப்பு
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 200 வங்கிகளின் கிளைகள் இயங்கவில்லை. வேலை நிறுத்தத்தில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் முற்றிலும் முடங்கியது. சுமார் ரூ.500 கோடிக்கான பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.
.

மேலும் செய்திகள்