தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-16 19:06 GMT
பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வசந்தம் நகரில் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட நீர் தேக்கத் தொட்டி பொதுமக்கள் பயன்பாடு இன்றி உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
சக்திவேல், கல்பாளையம், திருச்சி.

3 ஆண்டுகளாக அவதிப்படும் கிராம மக்கள் 
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள ஆலத்திப்பள்ளம் என்ற கிராமத்தில் அளவேரி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழைநீர் வரும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் மீன்சுருட்டி- அழகர் கோவில் செல்லும் சாலையின் குறுக்கே  சென்று ஏரியில் முடிவடைகிறது. இந்த நிலையில் இந்த சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த பாலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அடித்து செல்லப்பட்டு விட்டதால் தற்போது குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால் ஆலத்திப்பள்ளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 4 கிலோ மீட்டரில் அடைய வேண்டிய மீன்சுருட்டிக்கு 14 கிலோ மீட்டர் சுற்றி வந்து அவதிப்படுகின்றனர். இதனால் கால விரயம் அடைவதுடன் இப்பகுதி மக்கள் ஆபத்தான இந்த குழாயில் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஆலத்திப்பள்ளம், அரியலூர். 

கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும்
பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில்  ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் இறந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
குமார் அய்யாவு, செங்குணம், பெரம்பலூர்.

திறக்கப்படாமல் உள்ள பஸ் நிலையம் 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கிவிட்டும், ஏற்றியும் செல்கின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து திறக்கப்படாமல் உள்ள பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கும்பே சேகரன், கறம்பக்குடி, புதுக்கோட்டை. 

கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கொசுக்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
தினா, மருவத்தூர், பெரம்பலூர்.

கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு 
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், ராஜேந்திரம் ஊராட்சி
பரளி பஸ் நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பரளி, கரூர். 

பாலத்தில் உடைப்பு 
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு பரிசல் துறை சாலை, மேலத்தெருவை இணைக்கும் வகையில் சாலையின் குறுக்கே சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் மற்றும் காலை, மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த பாலம் ஒரு பகுதியில் உடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேலத்தெரு, திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி பெல்ஸ் கிரவுண்ட் 26-வது வார்டு பகுதியில் குப்பைகள் மற்றும் தேங்கி நிற்கும்  மழைநீர் அகற்றப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு,  அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் குப்பைகளையும், மழைநீரையும் அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விஜய் ஆனந்த், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி-லால்குடி செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக நெ.1 டோல்கேட்டிலிருந்து லால்குடி வரையிலான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் மோட்டார் சைக்கிளை விட்டு விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். 
இதேபோல் அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சாவூர், பூண்டி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் திருச்சி- சிதம்பரம் சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

மேலும் செய்திகள்