தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-12-16 18:45 GMT
தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய் 
சேலம் மேயர் நகர் 1-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருவில் செல்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு இந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். கழிவுநீரில் இருந்து கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தி ஆவதால் மலேரியா, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு குழந்தைகள், முதியோர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை அடிக்கடி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், மேயர் நகர், சேலம்.
எரியாத மின்விளக்குகள்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா செட்டியூர் கிராம மாரியம்மன் கோவில் அருகில் மின் விளக்குகள் பல ஆண்டுகளாக எரியாமல் இருக்கிறது. அந்த பகுதியில் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கு இரவில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை எரியச்செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், செட்டியூர், தர்மபுரி.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் மின்விளக்கு இல்லாததால் பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே குறிப்பிட்ட பகுதியில் மின் விளக்கு அமைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
-காந்திசங்கர், ராசிபுரம்.
பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்
நாமக்கல் மாவட்டம் வடவத்தூர் ஊராட்சி ஜம்புமடை கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இன்று வரை அந்த கழிப்பறை மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே உடனடியாக கழிப்பறை வசதியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், ஜம்புமடை, நாமக்கல்.
வேகத்தடை வேண்டும்
சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
-கேசவராஜ், ஜங்சன் ரெயில்நிலையம், சேலம்.
டவுன் பஸ் இயக்கப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பஸ் நிலையத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட நகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்கள் பர்கூரில் இருந்து மத்தூர், போச்சம்பள்ளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆந்திர மாநில எல்லையில் உள்ள வரமலை குண்டா ஆகிய பகுதிகள் வரை சென்று வந்தன. கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கத்தால் பஸ்கள் நிறுத்தப்பட்டன. அதன்பின் படிப்படியாக கொரோனா குறைந்தும் இந்த பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி இயக்கப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பர்கூர்.

சேலத்தில் இருந்து மகுடஞ்சாவடி வழியாக ஊத்துப்பாளையம் கிராமத்துக்கு எண் 30டி என்ற டவுன் பஸ்  வந்தது. இந்த பஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அந்த பகுதிக்கு இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி  செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து 30டி டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
-சரவணன், ஊத்தூப்பாளையம், சேலம்.
நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி சுத்திகரிப்பு நிலையம் பகுதியில் சாக்கடை நீர் தேங்கியும், முட்புதர்கள் அதிகம் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு சாக்கடை நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் முட்புதர்களில் இருந்து விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளன. இதனை சரிசெய்து நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டும்.
-ம.கவுதம், காவேரி பாலம், சேலம்.

சேலம் கிச்சிப்பாளையம் திருமலை நகரில் புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாயை உடனே சரிசெய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், திருமலை நகர், சேலம்.
காட்சி பொருளான குடிநீர் தொட்டி
சேலம் பெரமனூர் நாராயணபிள்ளை தெருவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின் மோட்டார் இணைப்புடன் குடிநீர் தொட்டி உள்ளது. கடந்த ஆண்டு மின்மோட்டார் பழுது, குடிநீர் தொட்டி சேதமடைந்த காரணத்தால் அவை சரிசெய்யப்பட்டது. ஆனால் குழாயில் இருந்து தண்ணீர் வராததால் குடிநீர் தொட்டி காட்சி பொருளாக மாறிவிட்டது. எனவே குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனுஷ், நாராயணபிள்ளை தெரு, சேலம்.
எரிக்கப்படும் குப்பைகள்
சேலம் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி கிராமம், 9-வது வார்டு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலையின் ஓரத்தில் கொட்டி வைத்துள்ளனர். அங்கு குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் அந்த குப்பைகளை தீவைத்து எரிக்கிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், தம்மநாயக்கன்பட்டி, சேலம்.
===

மேலும் செய்திகள்