நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு-5 ரூபாயாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து, 5 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்படி முட்டை கொள்முதல் விலை 5 ரூபாயாக உயர்ந்தது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-525, ஐதராபாத்-480, விஜயவாடா-502, மைசூரு-505, மும்பை-540, பெங்களூரு-505, கொல்கத்தா-557, டெல்லி-545.
கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் கேக் தயாரிக்க முட்டை அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முட்டை விற்பனை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் வடமாநிலங்களில் குளிர் காரணமாக முட்டை விற்பனை சூடுபிடித்து உள்ளது. எனவே பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கறிக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.93 ஆக சரிவடைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.