வேலூரில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம். ரூ.300 கோடி பரிவர்த்தனைகள் பாதிப்பு

வேலூரில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.300 கோடி பணபரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-16 18:30 GMT
வேலூர்

வேலூரில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.300 கோடி பணபரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தபோராட்டம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெற்றது. 
வேலூர் மாவட்டத்தில் நேற்று வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 சங்கங்களை சேர்ந்த 220 வங்கிகளில் பணியாற்றும் 1,500 ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் (வெள்ளிக்கிழமை) இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால் பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டன. வங்கிகள் முன்பு வேலைநிறுத்த போராட்டம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம்

வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஸ்டேட் வங்கி அருகே வங்கி ஊழியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் மில்டன் தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி அலுவலர்கள் சங்க வேலூர் கிளை செயலாளர் ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் வங்கிகள் தனியார் மயமாக்கத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வங்கிகளுக்கு வந்த அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காசோலைகள் மற்றும் பணபரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டன.

பணபரிவர்த்தனை

நிர்வாகிகள் கூறுகையில், வங்கிகள் தனியார் மயமாக்கினால் பொதுமக்களின் பணம் பறிபோகும் சூழ்நிலை ஏற்படும். வேலைவாய்ப்பு பறிபோகும். வேலை நிறுத்தத்தால் வேலூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்