அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை-நாமக்கல்லில் அண்ணாமலை பேட்டி

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2021-12-16 18:30 GMT

நாமக்கல்:
கருத்தரங்கு
நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் பா.ஜ.க. சார்பில் இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் வடிவேலு வரவேற்றார். பொதுச்செயலாளர்கள் முத்துக்குமார், நாகராஜன், சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பொதுச்செயலாளர் செல்வகுமார், துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினர். இதில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மத்திய அரசு மண்வள அட்டை, 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார். முன்னதாக கருத்தரங்கில் இயற்கை விவசாயம் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றியது விவசாயிகள் மத்தியில் காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
குழப்பம் இல்லை
நிகழ்ச்சி முடிந்ததும் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒரே கூட்டணியில் உள்ளது. எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை. எந்த குழப்பமும் இல்லை. புதிய வேளாண் சட்டங்களை பொறுத்த வரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு உருவத்தில் இருந்து வந்தது. அதை நாடு முழுவதும் ஒருங்கிணைக்க வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநில விவசாயிகள் புரிதல் இல்லாமல் அதை எதிர்த்து வந்தனர். எனவே பிரதமர் அந்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
ஆனால் இந்த சட்டங்களை விவசாயிகள் எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளும் நிலை வரும். நான் அடிப்படையில் ஒரு விவசாயி. எனவே எனக்கு விவசாயிகளின் பிரச்சினை தெரியும். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய சட்டம் பற்றி தெரியாமல் கருத்து தெரிவித்து வருகிறார்.
சட்டம், ஒழுங்கு சரியில்லை
மத்திய அரசு தமிழகத்தில் நன்றாக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு விருது வழங்கி வருகிறது. ஆனால் அமைச்சர்கள் நாங்கள் தான் செய்தோம் என பெருமை பாராட்டி வருகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. யூடியூபர் மாரிதாஸ் சொன்ன கருத்தில் தவறு எதுவும் இல்லை என்றேன். அதை தான் கோர்ட்டும் சொல்லி உள்ளது. 
மாநில அரசு புதிய திட்டங்களை கண்டுபிடித்து செயல்படுத்தினால் தான் மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் எந்தவித மக்கள் நலன் சார்ந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. 
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை
தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடித்து செயல்படுத்தி வருகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்துவது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் கருத்து சொன்னால் தான் சரியாக இருக்கும். 
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாற்றுக்கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் அண்ணாமலை முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டனர். 
நிகழ்ச்சியில் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.விஜய், கோட்ட அமைப்பு செயலாளர் பழனிசாமி, மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம், மாவட்ட துணை தலைவர் ரஞ்சித்குமார், மருத்துவ பிரிவு நாமக்கல் மாவட்ட துணை தலைவர் டாக்டர் ஷியாம் சுந்தர், வர்த்தக அணி மாவட்ட தலைவர் நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்