டாஸ்மாக் பார்களில் மது விற்பனை: குமாரபாளையம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

டாஸ்மாக் பார்களில் மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கக்கோரி குமாரபாளையம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-12-16 18:29 GMT
குமாரபாளையம்:
பார்களில் மது விற்பனை
குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 10 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் அருகிலேயே 10 தனியார் மதுபான பார்கள் ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. பார்களில் பெரும்பாலானவை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும், பஸ் நிறுத்தம் அருகிலேயும் உள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இதனிடையே 24 மணி நேரமும் பார்களில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மதுப்பிரியர்கள் பஸ் நிறுத்தங்களை ஆக்கிரமித்து மது அருந்துகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்தநிலையில் குமாரபாளையம் கே.ஓ.என். பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் நேற்று அதிகாலை மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் பார் ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் பார்களில் மது விற்பனை செய்வதை தடுக்கக்கோரியும், மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மது விற்பனை நடந்ததாக கூறப்பட்ட 2 பார்களையும் பூட்டினர். அதன்பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்