போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் திடீர் உண்ணாவிரத போராட்டம்

பாலியல் பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் திடீர் போராட்டம் நடத்தினார். அப்போது அவர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-12-16 18:29 GMT
நாகா்கோவில், 
பாலியல் பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் திடீர் போராட்டம் நடத்தினார். அப்போது அவர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலியல் பலாத்காரம்
களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் மீது  மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெண் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சருக்கு மனுவும் அனுப்பி உள்ளார். ஆனால் தற்போது வரை சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தார். இதைத் தொடர்ந்து முன் எச்சரிக்கையாக கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து திடீரென்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். 
நடவடிக்கை
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “என்னை பாலியல் பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யவில்லை. மேலும் அவர் மீது துறை ரீதியாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பெண், போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். அதன்பிறகு அவரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
மேலும் ஒரு வழக்கு 
இதற்கிடையே சம்பந்தப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் வேறொரு புகார் ஒன்றை அளித்தார். தன்னை பற்றி சமூக வலைதளத்தில் ஒருவர் அவதூறு பரப்புவதாக அந்த புகாரில் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்