350 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த வாலிபர் கைது
ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு 350 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்
ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு 350 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தனிப்படை
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 29-ந்தேதி உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையிலான தனிப்படையினர் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்தவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாநகருக்கு கஞ்சா கடத்தி வந்து வியாபாரம் செய்யும் சந்தேக நபர்கள் தொடர்பாக சில தகவல்கள் கிடைத்தன.
அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள். இதில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு காரில் திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், ஏட்டுகள் விசுவநாதன், சிவக்குமார், முதல்நிலை காவலர்கள் பாஸ்கரன், தங்கராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று அதிகாலை அங்கேரிப்பாளையம் ரோடு கொங்குநகர் பள்ளி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது காருக்குள் ஒரே அளவில் ஒரே நிறத்தில் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது அவை கஞ்சா என்பது தெரியவந்தது. விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மேகமலை காந்தி கிராமத்தை சேர்ந்த பால்பாண்டி (வயது 27) என்பதும், பாக்கெட்டுகளில் இருந்தது 350 கிலோ கஞ்சா என்பதும் தெரியவந்தது.
பறிமுதல்
தொடர்ந்து நடத்திய விசாரணையில், விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வியாபாரிகள், மொத்தமாக கஞ்சாவை பாக்கெட்டுகளில் அடைத்து கார் மூலமாக திருப்பூருக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இவ்வாறு காரில் கஞ்சாவை கடத்திக்கொண்டு வருவதற்கு கார் டிரைவருக்கு அதிக அளவு பணம் கொடுத்துள்ளனர். கஞ்சாவை கடத்தி வரும்போது அங்குள்ள வியாபாரிகள் சிலர் காரில் குறிப்பிட்ட தூரம் வந்ததும், காரில் இருந்து இறங்கியுள்ளனர்.
திருப்பூர் மாநகருக்குள் நுழைந்ததும் தேனி மற்றும் திருப்பூரை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் ஒன்று சேர்வார்கள். அவர்களிடம் கஞ்சாவை ஒப்படைத்து அதன்பின் அவர்கள் பகுதி வாரியாக பிரித்து கஞ்சாவை விற்பனை செய்தது தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.40 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். பால்பாண்டி கொடுத்த தகவலின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கஞ்சா வியாபாரிகளை தனிப்படையினர் தேடி வருகிறார்கள். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பாராட்டி சன்மானம் வழங்கினார். துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் அனில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.