தடுப்புச்சுவர் இல்லாத பாலங்கள்

தடுப்புச்சுவர் இல்லாத பாலங்களால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2021-12-16 17:46 GMT
திருப்பூர்
 திருப்பூர் தட்டான் தோட்டம் பகுதி வழியாக ஜம்மனை ஓடை செல்கிறது. இந்த ஓடையின் குறுக்காக கட்டப்பட்டுள்ள பாலத்தின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவர்கள் கட்டப்படாமல் உள்ளது. அதற்கு பதிலாக கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை உயரம் குறைவாக இருப்பதாலும், ஒவ்வொரு தூணிற்குமான இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதாலும் இவை பாதுகாப்பற்றதாக உள்ளது. இந்த பாலம் வழியாக தட்டான் தோட்டம், பல்லடம் ரோடுக்கு அதிக அளவிலான வாகனங்கள் செல்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தால் இவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் ஓடையில் இருந்து சுமார் 10 அடி உயரத்தில் இந்த பாலம் இருப்பதால் ஏதேனும் வாகனங்கள் கட்டுப்பாடை இழந்தால் ஓடைக்குள் பாய்ந்து பேராபத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. 
வாகன ஓட்டிகள் அச்சம்
இதேபோல், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கருவம்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஒரு பாலத்திலும் தடுப்புச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. மேலும், இந்த பாலத்தில் கான்கிரீட் தூண்களும் அமைக்கப்படாமல் உள்ளது. மார்க்கெட்டிற்கு தினமும் அதிக அளவில் வாகனங்கள் வருவதால் இந்த பாலத்தை அதிகமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தடுப்புச்சுவர் இன்றி இந்த பாலம் இருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பாலத்திற்கும், ஓடைக்குமிடையேயான ஆழம் அதிகமாக இருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இந்த பாலம் வழியாக அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன.
தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
அதுபோன்ற நேரத்தில் பாலத்தில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று ஒதுங்கி செல்வதற்கு இடமின்றி வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இதேபோல், நடந்து செல்லும் பொதுமக்களும் தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தின் ஓரமாக அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே, இந்த பாலத்திற்கும், தட்டான்தோட்டம் உள்பட திருப்பூர் மாநகரில் தடுப்புச்சுவரின்றி காணப்படும் பிற பாலங்களிலும் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்