சிகிச்சைக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
ஆரணியில் சிகிச்சைக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி
ஆரணியில் சிகிச்சைக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை பறிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வராகமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி, நகை தொழிலாளி.
அவரது மனைவி மகாலட்சுமி (வயது 40). இவர்கள் இருவரும் நேற்று ஆரணி கொசப்பாளையம் தச்சூர் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைபெற்று விட்டு மீண்டும் இரவு 10.15 மணி அளவில் வீடு திரும்பினர்.
காமாட்சி அம்மன் கோவில் தெருவில் கோவிலுக்கு அருகில் சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் முககவசம் அணிந்து வந்தனர். அவர்கள் மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.
அவர்களை அருணகிரி பின்னால் துரத்தி சென்றுள்ளார். மர்மநபர்கள் மகாலட்சுமி கழுத்தில் இருந்து சங்கிலியை பறித்தபோது அதில் இருந்து சுமார் 1½ பவுன் பகுதி கீழே சிதறி விழுந்துள்ளது. 6½ பவுன் சங்கிலி மட்டும் மர்ம நபர்கள் கையில்சிக்கி உள்ளது.
2 பேருக்கு வலைவீச்சு
இது குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்- இன்ஸ்பெக்டர் தருமன், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் வாகன சோதனையும் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ரூபன்குமார் தலைமையில் போலீசார் இன்று அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து ஆய்வு செய்தனர்.
இதையடுத்து சந்தேகப்படும்படியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒட்டிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.