78 வங்கிகள் மூடப்பட்டன
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 78 வங்கிகள் மூடப்பட்டன. இதனால் வங்கி பண பரிவர்த்தணைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
ராமநாதபுரம்,
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராம நாத புரம் மாவட்டத்தில் 78 வங்கிகள் மூடப்பட்டன. இதனால் வங்கி பண பரிவர்த்தணைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
வேலை நிறுத்தம்
வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி நாடுமுழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது.
இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 78 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் மேற்கண்ட 78 வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டன. வங்கி ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் வங்கிகள் வேலைநிறுத்தம் என அறியாமல் வந்த வாடிக்கை யாளர்கள் தங்களின்அத்தியாவசிய வங்கி பணிகளை மேற்கொள்ள முடியாமல் திரும்பி சென்றனர்.
மாவட்டத்தில் 78 வங்கிகளை சேர்ந்த 320 ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டதால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிகள் பெரிதும் பாதிக்கப் பட்டன.
அவதி
குறிப்பாக அதிக பணபரிவர்த்தனை நடைபெறும் பாரத ஸ்டேட் வங்கியும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட தால் மக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். வங்கிகளில் நடைபெறும் பணி பரிவர்த்தணைகள் தவிர ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவது உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப்பட்டன.
இதனால் அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கமுடியாமல் அவதிப்பட்டனர். வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாத வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் அதிக பயன்பாடு காரணமாக பணம் காலியானதோடு, தேவைக்கு ஏற்ப பணம் நிரப்பப்படாததால் மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்தனர். வங்கிகள் மூலம் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.