பெரும்பாறை அருகே மாணவி எரித்து கொலை மாணவர்கள், பொதுமக்களிடம் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை

பெரும்பாறை அருகே மாணவி எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாணவர்கள், பொதுமக்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.

Update: 2021-12-16 16:07 GMT
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே பாச்சலூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மகள் பிரித்திகா (வயது 9) பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் பிரித்திகா தீயில் எரிந்து கருகி கிடந்தாள். இதையடுத்து அவளை சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக இறந்துவிட்டாள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 டி.ஐ.ஜி. விஜயகுமாரி விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மாணவி தீயில் கருகி கிடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பள்ளியில் உள்ள அறையில் மாணவ-மாணவிகள், பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அறைக்கதவு சாத்தப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து டி.ஐ.ஜி. விஜயகுமாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவி பிரித்திகாவின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவள் படித்த பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரிடமும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி கொண்டு இருக்கிறோம். தடய அறிவியல் நிபுணர்களை கொண்டு சம்பவம் நடந்த இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையிலும் விசாரித்து வருகிறோம். 
சந்தேக மரணம் என வழக்கு
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவியின் உடலில் தீக்காயம் தவிர வேறு எந்த காயமும் இல்லை. எனவே மாணவி இறந்தது தீக்காயத்தில்தான் என தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான் முழு விவரமும் தெரியவரும். தற்போது சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து உள்ளோம். 
இவ்வாறு அவர் கூறினார். அப்போது  கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் லாவண்யா, சந்திரன், கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், ஆர்.டி.ஓ. முருகேசன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்