வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

வங்கிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து கோவையில் நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.200 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Update: 2021-12-16 14:47 GMT
கோவை

வங்கிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து கோவையில் நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.200 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. 

வேலைநிறுத்த போராட்டம்

வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக 2 வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய தீர்மானித்து உள்ளது.

இதை கண்டித்து நேற்று, இன்று(வெள்ளிக்கிழமை) என 2 நாட்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வங்கி ஊழியர்கள் அறிவித்தனர். அதன்படி கோவை ரெயில் நிலையம் எதிரே பரோடா வங்கி மற்றும் ஆர்.எஸ்.புரம் திருவேங்கட சாலையில் உள்ள கனரா வங்கி முன்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் 1,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பணப்பரிவர்த்தனை பாதிப்பு

அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜவேலு, மீனாட்சி சுந்தரம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கனரா வங்கி மண்டல செயலாளர் பரணிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக காசோலைகள் பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் சுமார் 500 வங்கிகள் மூடப்பட்டு, அதில் பணியாற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் இன்று(நேற்று) மட்டும் சுமார் ரூ.200 கோடி வரை பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது. 

கடன் கிடைப்பதில் சிக்கல்

ஆன்லைன் வங்கி சேவை மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் தேவையான அளவு இருப்பு இருப்பதால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதால் பொதுமக்களின் சேமிப்புக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களுக்கு கடன் கிடைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. 

இதனால் இந்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி நடந்த பல கட்ட பேச்சவார்த்தைகள் தோல்வியடைந்ததால் தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்