ரெயில் மோதி புதுமாப்பிள்ளை பலி

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் ரெயில் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2021-12-16 14:46 GMT
கோவை

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் ரெயில் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த மாதம் திருமணம்

கோவை விளாங்குறிச்சி லெனின் வீதியை சேர்ந்தவர் திலீபன்(வயது 29). பி.எல். முடித்து உள்ள இவர், கோவை கோர்ட்டில் வக்கீலாக பயிற்சி பெற்று வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். தொடர்ந்து பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதத்தில் திருமண தேதி குறிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்யப்பட்டு வந்தது. 

மேலும் திலீபன் தனது திருமண பத்திரிகைகளை உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலை 7 மணியளவில் பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் திலீபன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

பிரேத பரிசோதனை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ரெயில் மோதி புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்