வாளையாறில் தனி சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு
பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வாளையாறில் தனி சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது. இதனை நேற்று கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை
பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வாளையாறில் தனி சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது. இதனை நேற்று கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார்.
தனி சோதனைச்சாவடி
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகளை அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கேரள மாநில எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாளையாறு, ஆனைக்கட்டி, நடுப்புணி உள்பட 12 சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக வாளையாறு எல்லையில் தனியாக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் ஆய்வு
அங்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் உரிய முறையில் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறதா? என்றும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனரா? என்றும் ஆய்வு செய்தார்.
மேலும் கேரளாவில் உள்ள பண்ணைகள், கால்நடை கூடங்கள், கால்நடை தீவன தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு பறவை இனங்களை ஏற்றி வரும் வாகனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
உரிய அனுமதி
இதைத்தொடர்ந்து கலெக்டர் சமீரன் கூறும்போது, கால்நடைகள், பறவைகள் மற்றும் கால்நடை தீவனங்களை கேரளாவில் இறக்கிவிட்டு திரும்ப வரும் வாகனங்கள் தமிழகத்திற்குள் நுழையும்போது உரிய அனுமதி பெற்றுதான் நுழைகின்றதா? என்று சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவுக்கு சென்று விட்டு உரிய அனுமதியின்றியும், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காமலும் வரும் வாகனங்கள் தமிழகத்திற்கு அனுமதிக்கப்படாது என்றார்.
அப்போது அவருடன் கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி உள்பட பலர் இருந்தனர்.