2 வக்கீல்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
2 வக்கீல்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்;
கோவை
கோவை நீலாம்பூரை சேர்ந்தவர் தர்மலிங்கம். விவசாயி. இவர் தனது சார்பில் வழக்கு நடத்திய வக்கீல்கள் பி.பிரசாத், கே.வேணுகோபால் ஆகியோர் மீது பார் கவுன்சிலில் புகார் செய்து இருந்தார். அதில், அவர்கள் தன்னிடம் வழக்குக்கு கட்டணம் வாங்கிக்கொண்டு எதிர்தரப்பினருடன் சேர்ந்து செயல்பட்டதாகவும், தன்னை மிரட்டியதுடன் வழக்கு கட்டுகளை தரமறுத்ததாகவும், வேண்டுமென்றே வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்தது.
இந்த விசாரணையை கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு சேர்மன் பிரிசில்லா பாண்டியன், உறுப்பினர்கள் கதிரவன், பாலாஜி ஆகியோர் நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, அடுத்த 2 வாரங்களுக்குள் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வக்கீல்கள் பி.பிரசாத், கே.வேணுகோபால் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் அவர்கள் 2 ஆண்டுகளுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மனுதாரருக்கு இழப்பீடு தொகை வழங்கும்பட்சத்தில் வக்கீல்கள் மீதான பணியிடை நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.