பொதுப்பணித்துறை என்ஜினீயருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
பொதுப்பணித்துறை என்ஜினீயருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
கோவை
கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயராக பணியாற்றியவர் எம்.ரமேஷ். பொள்ளாச்சியை சேர்ந்த இவருக்கு, ஆழியாறு பகுதியில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ரவிக்குமார் என்பவரிடம் நீர்வழித்தடத்தில் சிறிய பாலம் கட்ட அனுமதி அளிக்க என்ஜினீயர் எம்.ரமேஷ் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதன்படி அவருக்கு, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க ரவிக்குமார் சம்மதித்தார். அதற்கு முன்னதாக லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் செய்தார்.
இதையடுத்து ரூ.5 ஆயிரம் லஞ்சத்தை வாங்கும்போது என்ஜினீயர் எம்.ரமேசை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமதாஸ், குற்றம் சாட்டப்பட்ட எம்.ரமேசுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.