தெருவிளக்குகள் ஒளிரவில்லை
கோவை மணியகாரம்பாளையம் தபால் நிலையம் அருகே 2 மின்கம்பங்களில் தெருவிளக்குகள் ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியே இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லவே பயமாக இருக்கிறது. எனவே தெருவிளக்குகளின் பழுதை நீக்கி ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுவாமிநாதன், மணியகாரம்பாளையம்.
கால்நடைகள் தொல்லை
பொள்ளாச்சி-உடுமலை சாலையில் ஆங்காங்கே மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி அதன் உரிமையாளர் கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயந்தி, பொள்ளாச்சி.
நிலைதடுமாறும் வாகன ஓட்டிகள்
நெகமம் அருகே கப்பளாங்கரை செல்லும் சாலையில் 2 இடங்களில் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறுகிறார்கள். இதனால் விபத்துகளும் நடக்கிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் ஆபத்தாக சாலையில் காணப்படும் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
ரமேஷ், நெகமம்.
தொற்று நோய் பரவும் அபாயம்
கோவை அத்திப்பாளையம் பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் கலக்கம் அடைந்து உள்ளனர். எனவே அங்கு தேங்கி கிடக்கும் சாக்கடை கழிவுநீரை அகற்றி தொடர் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
சக்திவேல், அத்திப்பாளையம்.
சேதம் அடைந்த இரும்பு தடுப்புகள்
கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டியில் இருந்து சோலூர்மட்டம் செல்லும் சாலையோரத்தில் இருந்த அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்தது. அப்போது வெட்டப்பட்ட மரங்கள் அருகில் இருந்த இரும்பு தடுப்புகள் மீது விழுந்தன. இதனால் தடுப்புகள் சேதமடைந்து உள்ளன. ஆனால் அது சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த தடுப்புகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், கைகாட்டி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை தெலுங்குபாளையம் சுப்ரமணிய உடையார் வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அங்கு வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டியும் நிரம்பி வழிகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
பாலாஜி மோகன்ராஜ், கோவை.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
கூடலூர்-கோழிக்கோடு சாலையில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நந்தட்டி வரை நடைபாதை மற்றும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர். இருப்பினும் அந்த உத்தரவை அலட்சியம் செய்யும் வகையில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரன், கூடலூர்.
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
சாலையின் நடுவே கிடந்த மரக்கிளை அகற்றம்
கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் சாலையின் நடுவே தடுப்புச்சுவரில் பெரிய அளவிலான காய்ந்த மரக்கிளை போடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ‘தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் கிடந்த மரக்கிளையை அகற்றினர். இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்த ‘தினத்தந்தி'க்கும் நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் நன்றி.
பிரகாஷ், சித்தாபுதூர்.
கரடு, முரடான சாலை
கோவை மாநகராட்சி 20-வது வார்டு மருதமலை சாலையில் இருந்து சீரநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அங்குள்ள சாலை பெயர்ந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
ஜெ.ஜெகநாதன், சீரநாயக்கன்பாளையம்.
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கோவை திருச்சி ரோடு ராஜலட்சுமி மில் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் அந்த வழியாக நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. இது தவிர திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பழுதான தெருவிளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்செல்வன், சிங்காநல்லூர்.