வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தேனி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், ரூ.20 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Update: 2021-12-16 13:52 GMT
தேனி: 


வேலை நிறுத்தம்
2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா-2021. நடப்பு நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் 193 கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் சுமார் 1,200 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 750 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

ரூ.20 கோடி பரிவர்த்தனை
வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் உள்ள வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில வங்கிகள் பூட்டிக் கிடந்தன. பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் ஏ.டி.எம். மையங்களை மக்கள் தேடிச் சென்றனர். சில இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்த முடியாமல் மக்கள் சிரமம் அடைந்தனர்.
வங்கிகளில் காசோலை, வரைவோலை பரிவர்த்தனை, நகைக்கடன், விவசாய பயிர்க்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகள் மற்றும் வங்கிகள் மூலமான நேரடி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.20 கோடி அளவில்  பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்
வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக தேனியில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தேனி மண்டல செயலாளர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தேனி மண்டல செயலாளர் விக்னேஷா, கனரா வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்தும், இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்