ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை இணைக்க தூக்கு படுக்கையில் வந்த மூதாட்டி

ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை இணைக்க ஆம்புலன்ஸ் மூலமாக மூதாட்டியை தூக்கு படுக்கையில் வைத்து பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்துக்கு அழைத்து வந்தனர்.

Update: 2021-12-16 09:10 GMT
பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியைச் சேர்ந்த பச்சையம்மாள் என்ற மூதாட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தற்போது அவர், சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை இணைக்காமல் இருப்பதால் பணத்தை எடுக்க முடியாது என வங்கி அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. 

இதனால் மூதாட்டி பச்சையம்மாளை அவரது உறவினர்கள், அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக தூக்கு படுக்கையில் வைத்து பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ஆதார் அட்டையில் அவரது செல்போன் எண்ணை இணைக்கப்பட்ட பிறகு மீண்டும் அதே ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற மூதாட்டி அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்