தர்மபுரியில் 4 இடங்களில் சந்தன மரங்களை வெட்டிய 5 பேர் கைது
தர்மபுரியில் 4 இடங்களில் சந்தன மரங்களை வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நல்லம்பள்ளி:
தர்மபுரியில் 4 இடங்களில் சந்தன மரங்களை வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சந்தன மரங்கள்
தர்மபுரியில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்களா, கூடுதல் கலெக்டர் பங்களா மற்றும் தர்மபுரி ஆயுதப்படை ஆகிய இடங்களில் இருந்த 4 சந்தன மரங்களை மர்ம நபர்கள் கடந்த மாதம் வெட்டி கடத்தி சென்றனர். அவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள காலி நிலத்தில் 5 பேர் குழி தோண்டி கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த நபர்கள் முன்னுக்குபின் முரணாக தகவல் கூறினர். இதனால், போலீசார் குழியை முழுமையாக தோண்டி பார்த்தனர். அப்போது சந்தன கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.
5 பேர் கைது
இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது22), ஜவ்வாது மலையை சேர்ந்த உமாபதி (24), ரங்கசமுத்திரத்தை சேர்ந்த ராமேஸ்வரன் (23), காளியப்பன் (24), மாங்குப்பத்தை சேர்ந்த கண்ணாயிரம் (64) என்பதும், தர்மபுரியில் 4 இடங்களிலும் சந்தன மரங்களை வெட்டியதும் தெரியவந்தது. குழியில் புதைத்து வைத்திருந்த சந்தன மரங்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பங்களா, கூடுதல் கலெக்டர் பங்களாவில் அவர்கள் வெட்டியது தெரிந்தது.
மேலும் 2 இடங்களில் வெட்டிய சந்தன மரங்களை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தசாமி (34) என்பவர் கடத்தி சென்றும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் குழியில் புதைத்து வைத்திருந்த 6 கிலோ சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான கோவிந்தசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.