வாய்க்கால் ஓரத்தில் குப்பைகள் (படம்)
ஈரோடு வைராபாளையம் காலிங்கராயன் வாய்க்கால் ஓரத்தில் பலர் குப்பைகளை கொட்டி சென்று விடுகிறார்கள். இதனால் வாய்க்கால் ஓரத்தில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. காற்று அடிக்கும் நேரத்தில் இந்த குப்பை தூசு பறந்து காலிங்கராயன் வாய்க்காலுக்குள் விழுகிறது. மேலும் வாய்க்கால் ஓரத்தில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அருள்மொழி, ஈரோடு.
உடைந்த தரைப்பாலம்
ஈரோடு வைராபாளையம் ரோடு அருள்நெறி திருப்பணி பள்ளிக்கூடம் அருகில் ஒரு தரைப்பாலம் உள்ளது. இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் அந்த தரைப்பாலம் உடைந்து உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் 4 சக்கர வாகனங்களில் செல்லமுடியவில்லை. பள்ளிக்கூடம் அருகில் உள்ளதால் மாணவ-மாணவிகள் பயந்தவாறே செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் உடைந்த இந்த தரைப்பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
ரோட்டில் பள்ளம்
ஈரோடு, ரங்கம்பாளையம் ரிங் ரோட்டின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்கிறார்கள். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைய நேரிடுகிறது. எனவே உடனடியாக பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கு.நாகராஜன், ரங்கம்பாளையம், ஈரோடு.
குப்பைகள் அள்ளப்படுமா?
பவானி வட்டம் கேசரிமங்கலம் கிராமத்தில் உள்ள சித்தார் ஓடை அருகே குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசு அடைந்துள்ளது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.தமிழரசன், கேசரிமங்கலம்
சாக்கடை வசதி வேண்டும்
அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள பாலம் அருகே சாக்கடை வசதி இல்லை. இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் ஆறு போல் ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது. உடனே சாக்கடை வசதி அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள், புதுப்பாளையம்
பாராட்டு
சிவகிரி பாரதி தெரு மனவளக்கலை மன்றம் அருகே உள்ள மின்கம்பம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. எனவே மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பழுதான மின்கம்பம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் வேறு மின்கம்பம் புதிதாக நடப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சிவகிரி.