போதைப்பொருள் விற்பனை: நைஜீரியாவை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் சிக்கினர்
பெங்களூருவில் வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
பெங்களூரு:பெங்களூருவில் வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்கள் விற்பனை
பெங்களூரு தெற்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்திருந்தது.
இதையடுத்து, போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும், தெற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும், துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், கோனனகுன்டே போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த முகமது வாகிம் யூனஷ் (வயது 23), மொயின் ஆலம் (22), முகமது ரகுமான் (22) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் கனகபுரா மெயின் ரோட்டில் உள்ள, மெட்ரோ ரெயில் நிலையம் முன்பாக வைத்து போதைப்பொருட்கள் விற்க முயன்ற போது, போலீசாரிடம் சிக்கி இருந்தனர். அவர்களிடம் இருந்து 111 கிராம் ஹெராயின் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது
இதுபோன்று, பனசங்கரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பனசங்கரி 2-வது ஸ்டேஜில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ய முயன்ற நைஜீரியாவை சேர்ந்த ஜிடோமா சாமுவேல் (33) மற்றும் பூபானா அகமது (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து 32 கிராம் கொகைகன், ரூ.7 ஆயிரம், 2 விலை உயர்ந்த செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல், குமாரசாமி லே-அவுட் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குமாரசாமி லே-அவுட் பகுதியில் கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற பரத் (36) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1.30 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் மீது கோனனகுன்டே, பனசங்கரி, குமாரசாமி லே-அவுட் போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.