2 சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்த தம்பதி உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
பணத்திற்கு ஆசைப்பட்டு 2 சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.
சிக்கமகளூரு: பணத்திற்கு ஆசைப்பட்டு 2 சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.
சிறுமிகளுக்கு திருமணம்
தாவணகெரேயை சேர்ந்த 2 சிறுமிகள் சித்ரதுர்காவில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் அந்த சிறுமிகள் பள்ளி முடிந்ததும் சித்ரதுர்காவில் இருந்து ரெயிலில் வந்து தாவணகெரே ரெயில் நிலையத்தில் இறங்கினர்.
அப்போது அந்த 2 சிறுமிகளிடம், ஹாவேரி மாவட்டம் ஒசஹட்டி கிராமத்தை சேர்ந்த கொட்டரப்பா(வயது 65), அவரது மகள் மல்லம்மா(35), இவரது கணவர் பரத்(42) ஆகியோர் நைசாக பேச்சு கொடுத்து உள்ளனர். அப்போது குஜராத்தில் எங்களுக்கு தெரிந்த 2 பேர் உள்ளனர்.
அவர்களுக்கு உங்களை திருமணம் செய்து வைக்கிறோம். வசதியாக வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர். இதனால் அந்த 2 சிறுமிகளும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் 2 சிறுமிகளையும், குஜராத்தை சேர்ந்த 2 பேருக்கு திருமணம் செய்து வைத்தனர். இதற்கிடையே சிறுமிகள் மாயமானதாக அவர்களின் பெற்றோர் தாவணகெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தலா 3 ஆண்டுகள் சிறை
அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்த போது 2 சிறுமிகளையும் பணத்திற்கு ஆசைப்பட்டு குஜராத்திற்கு கடத்தி சென்று கொட்டரப்பா, மல்லம்மா, பரத் ஆகியோர் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து இருந்தனர்.
கைதான 3 பேர் மீதும் தாவணகெரே கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2011-ம் ஆண்டு நடந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி ராஜேஸ்வரி தீர்ப்பு கூறினார். அப்போது கொட்டரப்பா, மல்லம்மா, பரத் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.