ஆற்றில் மூழ்கடித்து கா்ப்பிணி கொலை
மைசூரு அருகே, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஆற்றில் மூழ்கடித்து கர்ப்பிணியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.
மைசூரு: மைசூரு அருகே, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஆற்றில் மூழ்கடித்து கர்ப்பிணியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.
3-வது முறையாக கர்ப்பம்
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கசுவினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 40). இவரது மனைவி தேவிகா(28). இந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தேவிகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரிடம் தகராறு செய்து வந்தார்.
இதற்கிடையே தேவிகா 3-வது முறையாக கர்ப்பம் அடைந்து இருந்தார். அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நஞ்சன்கூடுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேசும், தேவிகாவும் ஸ்கேன் எடுக்க சென்று இருந்தனர். அவர்களுடன் முதல் குழந்தையும் சென்று இருந்தது. ஸ்கேன் எடுத்த முடித்ததும் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சாமி தரிசனம் செய்து விட்டு செல்லலாம் என்று கூறி தேவிகாவை, ராஜேஷ் அழைத்து சென்று உள்ளார்.
ஆற்றில் மூழ்கடித்து கொலை
பின்னர் கோவில் அருகே ஓடும் கபிலா ஆற்றில் தேவிகாவை, ராஜேஷ் குளிப்பதற்காக அழைத்து சென்றார். அங்கு ைவத்து அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென தகராறு உண்டானது. அப்போது ஆத்திரம் அடைந்த ராஜேஷ், தேவிகாவை பிடித்து ஆற்றில் மூழ்கடித்து உள்ளார். இதில் மூச்சுத்திணறி தேவிகா இறந்தார். மேலும் குழந்தையையும் ராஜேஷ் ஆற்றில் தள்ளி கொல்ல முயன்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்தனர்.
இதனால் ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் தேவிகாவின் பிணம் ஆற்றில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நஞ்சன்கூடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த நஞ்சன்கூடு போலீசார் தேவிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தேவிகாவை ஆற்றில் மூழ்கடித்து ராஜேஷ் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கசுவினஹள்ளி கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ராஜேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான ராஜேஷ் மீது நஞ்சன்கூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கர்ப்பிணியான மனைவியை கணவனே கொன்ற சம்பவம் மைசூரு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.