124 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாகர்கோவில் மாநகரில் கடந்த 3 நாட்களில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 124 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரில் கடந்த 3 நாட்களில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 124 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்புகள்
நாகர்கோவில் மாநகரில் பல்வேறு சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதே சமயத்தில் ஆக்கிரமிப்பால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே வருவதாகவும் கூறப்பட்டது. எனவே இதுதொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நாகர்கோவில் மாநகரில் சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகளின் மேற்கூரை, சாய்தளம், விளம்பர பலகை, அறிவிப்பு பலகை உள்ளிட்டவற்றை அகற்றும் பணி கடந்த 14-ந் தேதி தொடங்கியது. நாகராஜா ேகாவில் ரத வீதிகள், கோர்ட்டு ரோடு, செம்மாங்குடி ரோடு, தளவாய் ெதரு, கேப் ரோடு, கே.பி.ேராடு, அவ்வை சண்முகம் சாலை, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை என அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.
அகற்றம்
அந்த வகையில் முதல் நாள் அன்று 23 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 2-வது நாளான நேற்று முன்தினம் 66 கடைகளில் மேற்கூரை, சாய்தளம் மற்றும் விளம்பர பலகை ஆகியவையும், 14 தற்காலிக கடைகள் முழுமையாகவும் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று 3-வது நாளாக தீவிரமாக நடந்தது. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை மற்றும் டிஸ்டிலரி ரோடு ஆகிய இடங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தை கொண்டு சென்று ஒவ்வொரு கடைகளாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்ததால் சம்பந்தப்பட்ட சாலைகள் பரபரப்பாக காணப்பட்டது.
3-வது நாளாக நடவடிக்கை
3-வது நாளாக நடந்த பணியின்போது மொத்தம் 21 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மொத்தம் 124 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அவ்வாறு அகற்றப்பட்ட பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட கடைக்காரர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.