முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது
மயிலாடுதுறை- திருச்சி இடையே தஞ்சை வழியாக முன்பதிவில்லா ரெயில் சேவை நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தஞ்சாவூர்:
மயிலாடுதுறை- திருச்சி இடையே தஞ்சை வழியாக முன்பதிவில்லா ரெயில் சேவை நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
எக்ஸ்பிரஸ் ரெயில்
மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கும் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா கால கட்டத்தில் ரெயில்கள் சேவை நிறுத்தப்பட்டபோது இந்த ரெயிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறையத்தொடங்கியதையடுத்து ரெயில்கள் சேவையும் தொடங்கியது. முதல் கட்டமாக தொலைதூரங்களுக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களாக இயக்கப்பட்டன. தற்போது ஒவ்வொரு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது.
முன்பதிவில்லா வசதி
அதன்படி திருச்சி-மயிலாடுதுறை இடையேயான விரைவு ரெயிலும் 1½ வருடங்களுக்குப்பிறகு இயங்கியது. இந்த ரெயில் முன்பதிவு அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முன்பதிவில்லாமல் இந்த ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து திருச்சி-மயிலாடுதுறை இடையேயான முன்பதிவில்லா ரெயில் டிசம்பர் 15-ந்தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முதல் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை(சனி, ஞாயிறு தவிர) என 5 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று காலை 8.15 மணிக்கு இந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை, பூதலூர் வழியாக திருச்சிக்கு 10.40 மணிக்கு சென்றடைந்தது.
பயணிகள் கூட்டம் குறைவு
மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 1.30 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் தஞ்சையில் இருந்து புறப்பட்டு மதியம் 3.15 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடைந்தது.
நேற்று முதல் நாள் என்பதால் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தஞ்சையில் இருந்தும் இந்த ரெயிலில் குறைந்த அளவே பயணிகள் சென்றனர்.