திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் குறித்து கருத்து; காங்கிரஸ் எம்.பி. மீது போலீசில் புகார்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் குறித்து கருத்து தெரிவித்த கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
இந்து மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் இடத்தை முகலாய மன்னர் திப்புசுல்தான் வழங்கினார் என்றும், அப்துல்சமது என்பவர் பேகம் என்ற யானையை பரிசாக வழங்கினார் என்றும் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. செல்லக்குமார் கூறியிருக்கிறார்.
இந்த கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்துவது போன்று உள்ளது. மேலும் கோட்டை மாரியம்மன் கோவில் வரலாற்றை தவறாக கூறியதால் பதற்றமான சூழ்நிலை உள்ளது. எனவே கோட்டை மாரியம்மன் கோவில் வரலாற்றை திரித்து உண்மைக்கு புறம்பாக கருத்து கூறிய செல்லக்குமார் எம்.பி. மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.