பாலியல் வழக்கில் ஜாமீன் பெற்ற தனியார் கல்லூரி தாளாளர் கோர்ட்டில் ஆஜர்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற தனியார் கல்லூரி தாளாளர் மகிளா கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.
திண்டுக்கல்:
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற தனியார் கல்லூரி தாளாளர் மகிளா கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.
கல்லூரி தாளாளருக்கு ஜாமீன்
திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 3 மாணவிகள் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி விடுதி வார்டன் அர்ச்சனாவை கைது செய்தனர்.
இதற்கிடையே தலைமறைவான தாளாளர் ஜோதிமுருகன், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை, போலீசார் திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோதிமுருகனுக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதில் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
போராட்டம்
இந்த ஜாமீனை ரத்து செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு போராட்டம் நடத்தினர். மேலும் தாளாளர் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதேநேரம் நிபந்தனை ஜாமீன் பெற்ற ஜோதிமுருகன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை. மேலும் உடல் நிலை சரியில்லாததால் கையெழுத்திட இயலவில்லை என்றும், வடமதுரை போலீஸ் நிலையத்தை தவிர்த்து வேறுஇடத்தில் நிபந்தனை ஜாமீனுக்கு கையெழுத்திட அனுமதிக்கும்படி மகிளா கோர்ட்டில் ஜோதிமுருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கோர்ட்டில் கையெழுத்திட உத்தரவு
அந்த மனுவை நீதிபதி புருஷோத்தமன் விசாரித்தார். இதைத்தொடர்ந்து மறுஉத்தரவு வரும்வரை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஜோதிமுருகன் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஜோதிமுருகன் ஆஜராகி கையெழுத்திட்டார்.