நெல்லையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

ராதாபுரம் இளநிலை பொறியாளர் சாவுக்கு நீதி கேட்டு, நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-15 19:35 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த சந்தோஷ்குமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்கிணறு பகுதியில் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவரது சாவுக்கு நீதி கேட்டும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, களக்காடு, மானூர், வள்ளியூர், பாப்பாக்குடி, ராதாபுரம், அம்பை, நாங்குநேரி, சேரன்மாதேவி ஆகிய 9 யூனியன்களில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் சபரி காந்த் தலைமை தாங்கினார். தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ் வரவேற்றார். மாவட்ட தலைவர் பொன்ராஜ் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றினார். மற்றொரு சங்க மாவட்ட தலைவர் விக்னேஷ் கண்ணன் கண்டன உரையாற்றினார். இதில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்